பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் !!!

ஆப்பிள் நிறுவனத்தின் 2017 ஐபோன் அறிமுக விழாவில் ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஆப்பிள் வாட்ச் எல்டிஇ, புதிய ஏர்பாட்ஸ் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்பேஸ்ஷிப் வளாகத்தில் நடைபெற இருக்கும் முதல் விழாவில் இந்த ஆண்டின் ஐபோன் சாதனங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. செப்டம்பர் 12-ம் தேதி காலை துவங்க இருக்கும் விழாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் X, ஆப்பிள் வாட்ச் எல்டிஇ, புதிய ஏர்பாட்ஸ் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகியிள்ளது.

ஐபோன்களின் பத்தாவது ஆண்டு பதிப்பு ஐபோன் X என அழைக்கப்படும் என டெவலப்பரான ஸ்டீவன் டிரஃப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார். முன்னதாக புதிய ஐஓஎஸ் சார்ந்த தகவல்களையும் இவர் வெளியிட்டிருந்தார். புதிய ஐபோன் X ஸ்மார்ட்போனுடன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் இம்முறை S ரக மாடல்களை வெளியிடாது என்றும் கூறப்படுகிறது.

புதிய ஐபோன் X ஸ்மார்ட்போனில் OLED ஸ்கிரீன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் ஐபோன்களில் LCD  ஸ்கிரீன்களே வழங்கப்படுகின்றன. புதிய OLED ரக ஸ்கிரீன்கள் வெவ்வேறு நிறங்களையும் துல்லியமாக பிரதிபலிப்பதோடு, மின்சக்தியை குறைவாக பயன்படுத்தும். ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் LCD ரக ஸ்கிரீன்களே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இம்முறை வெளியாக இருக்கும் ஐபோன்களில் ஒரு மாடலில் நிச்சயம் முக அங்கீகாரம் (facial recognition) எனப்படும் ‘ஃபேஸ் ஐடி’ தொழில்நுட்பம் கொண்டிருக்கும். புதிய தொழில்நுட்பம் வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போன் திரையில் முகத்தை காண்பித்து அன்லாக் செய்ய முடியும்.

ஐபோன் X ஸ்மார்ட்போனில் பெசல்-லெஸ் பேனல், ஹோம் பட்டன் நீக்கப்பட்டு, டூயல் பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சம், 3D சென்சிங் வசதி கொண்ட கேமராக்கள், ஃபேஷியல் ரெக்கஃனீஷன், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் சிறப்பான வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஆப்பிள் புதிய வளாகத்தில் நடைபெற இருக்கும் ஆப்பிள் கீநோட் நிகழ்ச்சி அமெரிக்க நேரப்படி காலை 10.00 (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்க இருக்கிறது. புதிய ஆப்பிள் வளாகம் கலிபோர்னியாவில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஐபோன்களின் விலை 1000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.63,690 முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*