“ஒரு வண்டியில் 3, 4 பிரேதங்களை மொத்தமா ஏத்திக்கிட்டுப் போறாங்க” ! இது கோவை சோகம் !!!


கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட உடல்களை எடுத்துச்செல்ல, போதுமான இலவச அமரர் ஊர்தி வாகனங்கள் இல்லை. ஒரே வண்டியில் மூன்று, நான்கு பிரேதங்கள் ஏற்றுவதாகவும் அதற்கும் பணம் கேட்பதாகவும் எழுந்துள்ள புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இலவச அமரர் ஊர்தி வாகனம் கிடைக்காமல் தத்தளித்த திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகாவைச் சேர்ந்த மாடசாமியிடம் பேசினோம், ” என்னுடைய மகன் செல்வம் (19) மாரடைப்புல இறந்துட்டான். மதியம் 11 மணிக்கே போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சிருச்சி. ஆனா, சாயங்காலம் வரைக்கும் ஆம்புலன்ஸ் வரவே இல்லை. யார்கிட்ட கேட்டும் சரியான பதில் கிடைக்கலை.  தனியார் வண்டி எடுத்துக்கலாமானு கேட்டால் அதற்கும் கூடாதுனு சொல்லிட்டாங்க. ‘தானும் வரமாட்டேன். தனியாரும் வரக்கூடாதுனு’ சொன்னா, நாங்க என்ன செய்ய முடியும் சொல்லுங்க! உசிருக்கு உசுரா வளர்த்த மகனைப் பறிகொடுத்துட்டு நிக்கிறோம். அதைப் பத்தியெல்லாம் யோசிக்காம கொஞ்சம்கூட நாக்கு கூசாம வர்றவன் போறவன்லாம் பணம் கேட்குறான். சரி கரெக்ட்டா வண்டி கொடுத்தாக்கூட காசை அழுது தொலைக்கலாம். அதுவும் இல்லை. கவர்மென்டு இவனுங்களுக்கெல்லாம் எதுக்கு சம்பளம் கொடுக்குது? இலவசம்னு சொல்லிட்டு இவங்க அடிக்கிற கொள்ளை தாங்க முடியலங்க. நாங்க காலையிலேருந்து இங்க இருந்து பாத்துக்கிட்டு இருக்கோம். ஒரு வண்டியில் 3, 4 பிரேதங்களை மொத்தமா ஏத்திக்கிட்டுப் போறாங்க. கோயம்புத்தூர் மாதிரி பெரிய ஊர்லயே இவ்வளவு மோசமா இருக்குனா பாத்துக்கோங்க’ என்று கோபம் கொப்பளிக்க பேசியவர், ‘இங்கிருந்து பாடியை எடுத்துட்டு போறத்துக்குள்ள நாம பாடியாகிடுவோம்’ என்று நொந்துகொண்டார்.

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, மொத்தம் இருக்கிற 5 வண்டியில், 2 வண்டி எஃப்.சி-க்கும் ஒரு வண்டி மதுரைக்கும் போய்விட்டதாகவும் மற்ற 2 வண்டிகள் லோக்கலில் போயிருப்பதாகவும் தகவல் சொன்னார்கள்.

மாலை 6 மணிக்கு வந்த ஒரு அமரர் ஊர்தி வாகனத்தில், செல்வத்தின் உடலும் இன்னொருவர் உடலும் என ஒரே வாகனத்தில் இரண்டு உடல்கள் ஏற்றிச் செல்லப்பட்டன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*